* இந்திய பொருளாதார வளர்ச்சிவீதம் இப்போது 7% ஆக இருக்கிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது இது 6% ஆகக் குறைந்தது. தற்போது மீண்டும் உயர்ந்துவருகிறது. இந்த ஆண்டில் இது மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப் படுகிறது. இந்த வளர்ச்சி சீனாவைவிட அதிகம் என்பதால், உலகில் வேகமாகப் பொருளாதார வளர்ச்சியை அடையும் நாடாக இந்தியா பார்க்கப்படுகிறது.
* இந்தியாவின் பொருளாதார அடித்தளக் கூறுகள் கடந்த சில ஆண்டுகளாக வலுப்பட்டு வருகின்றன. பணவீக்க விகிதம் (விலைவாசி உயர்வு) 4% முதல் 5%-க்குள் இருக்கிறது. பிற நாடுகளுடனானவர்த்தகப் பற்று-வரவு நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
* வெளிவர்த்தகத்தில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஜிடிபி மதிப்பில் 1.5% அளவுக்குக் குறைந்திருக்கிறது. அந்நியச் செலாவணிக் கையிருப்பு 42,000 கோடி டாலர்களாக உள்ளது. இந்தத் தகவல்கள் இந்தியப் பொருளாதாரம் துடிப்புடன் இருப்பதைப் போலக் காட்டுகின்றன.
* கடந்த சில ஆண்டுகளாகவே முதலீடு குறைந்துகொண்டே வருகிறது. ஜிடிபியுடன் ஒப்பிடுகையில் முதலீடு 2014-இல் 34% ஆக இருந்தது, 2018-இல் 30% ஆகக் குறைந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய சரிவு. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதலீடு சரிந்திருக்கிறது. முதலீடு இப்படிச் சரிந்தால் எதிர்பார்த்தபடி உயர் வளர்ச்சி சாத்தியமே இல்லை.
* 2016-இல் தொழில் துறை உற்பத்தி 6%, 2017-ன் நடுப்பகுதியில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் அது 2% ஆகச் சரிந்தது. 2017-ன் கடைசி காலாண்டில் தொழில் துறை உற்பத்தி வேகம் எடுத்தது. தொழில் துறை உற்பத்தி இவ்வளவு குறைவாக இருக்கும்போது உயர் பொருளாதார வளர்ச்சி எளிதாக இருக்காது.
ய் வளர்ச்சிக்கு உதவும் இன்னொரு துறை வங்கியும் நிதி நிறுவனத்துறையுமாகும். சிறு தொழில், நடுத்தரத் தொழில், வேளாண்துறையின் சில பகுதிகளுக்கு வங்கி-நிதித் துறையின் உதவி அதிகம் தேவைப்படுகிறது. வேளாண் துறையில் தான் வேலைவாய்ப்புகள் அதிகம். வங்கித் துறையில் நெருக்கடி ஏற்பட்டால் அது வேளாண் துறையில் குறிப்பாக, வேளாண் துறை வேலைவாய்ப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
* கடந்த ஐந்து ஆண்டுகளாக வங்கிகள் கடன்தருவது படிப்படியாகக் குறைந்து வருகிறது. 2014-16-ஆம் நிதியாண்டில் 10% அளவுக்கு வங்கிகளின் கடன் வளர்ச்சி இருந்தது. பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, இந்தக் கடன் வளர்ச்சி 6% ஆனது. இதற்கு முக்கியக் காரணம், வாராக் கடன்களின் அதிகரிப்புதான்.
* வங்கிகளுக்கு வர வேண்டிய வாராக் கடன்களின் மதிப்பு 2015-இல் 5% ஆக இருந்தது, இப்போது 10% ஆக இரண்டுமடங்கு அதிகரித்துவிட்டது. கொடுத்து வசூலாகாத கடன்களைக் கறாராகப் பட்டியலிடுமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டதால், வாராக் கடன்களின் மதிப்பு அதிகமாக இருப்பது தெரியவந்திருக்கிறது. எனவே, வங்கிகள் இப்போது கடன் தரவே தயக்கம் காட்டுகின்றன. கடன் தர வங்கிகள் தயங்கும் போக்கும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவாது.
* பொருளாதாரத்தின் முக்கியப் பிரிவுகள் இப்படிப் பின்னடைவில் இருக்கும்போது, வளர்ச்சி வீதம் மட்டும் எப்படி 7% என்று காட்டுகிறது, கணக்கில் ஏதாவது செய்திருப்பார்களா என்ற கேள்வி எழக்கூடும். ஆனால் மிகவும் நேர்மையாகத்தான் இதில் நடந்துகொள்வார்கள். முறைசார்ந்த பெருநிறுவனங்களிடமிருந்து பெற்ற தரவுகளின் அடிப்படையில் இந்த வளர்ச்சி வீதத்தைக் கணக்கிட்டிருக்கிறார்கள். முறைசாராத் துறைகளிலிருந்து தரவுகள் முழுமையாகக் கிடைத்த பிறகு, இந்த வளர்ச்சி வீதம் மாறுதல் பெறுகிறது. ஆனால், அதற்குச் சில காலம் பிடிக்கும்.
* பணமதிப்பு நீக்கமும், நீண்ட கால நோக்கில் கொண்டுவரப்பட்ட பொதுச் சரக்கு-சேவை வரி அமலும் முறைசார்ந்த துறைகளைவிட, முறைசாராப் பொருளாதாரத் துறையையே வெகுவாகப் பாதித்துவிட்டன. எனவே, முறைசார்ந்த துறையிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலான வளர்ச்சி வீதக் கணக்கு, உண்மையை அதிகப்படுத்திக் காட்டவே உதவக்கூடும்.
* பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க அரசின் கொள்கைகள் உதவின என்றாலும், அரசால் கட்டுப்படுத்த முடியாத வெளி அம்சங்களும் அதில் பங்குவகிக்கின்றன. உணவு தானியங்கள், நிலக்கரி - பெட்ரோலியப் பண்டங்களின் விலைகள் குறைவாக இருந்ததால் நுகர்வோர் மொத்தவிலைக் குறியீட்டெண் குறைந்தது.விளைச்சல் குறைவால் உணவு தானியங்கள், காய்கறிகள் விலை அதிகரித்தாலோ, சர்வதேசச் சந்தையால் பெட்ரோல்-டீசல் விலை மேலும் உயர்ந்தாலோ தனதுபணக் கொள்கையைக் கொண்டு ரிசர்வ் வங்கியால் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாது.
* இந்தியாவின் இறக்குமதியில் 50% இடம்பிடிப்பவை கச்சா பெட்ரோலிய எண்ணெய், தங்கம், நிலக்கரி ஆகியவை. இவற்றின் விலை ஒரேயடியாக அதிகரிக்காமல் இருப்பதால் இந்தியாவால் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடிகிறது. ஏற்றுமதி அதிகரிக்காவிட்டாலும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை குறைவாக இருப்பதால், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கட்டுக்குள் இருக் கிறது. இந்தியா இறக்குமதி செய்யும் பிற பொருட்களின் விலை அதிகரித்தாலும் இந்தியாவால் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த முடியாது.
*பொருளாதாரம் பற்றிப் பேசும்போது மத்திய அரசின் பட்ஜெட்டை மட்டுமே கணக்கில் கொள்கிறோம். மத்திய அரசு - மாநில அரசுகளின் பட்ஜெட்டுகளையும் சேர்த்துத்தான் கணக்கில் கொள்ள வேண்டும். அப்படிப் பார்க்கும்போது மொத்தப் பற்றாக்குறை அளவு ஜிடிபியின் 6.5% ஆக இருக்கிறது. இந்தியாவின் கடன் அளவு ஜிடிபியில் 70%. புதிதாக வளர்ச்சி பெறும் நாடுகளில்கூட இந்த அளவுக்குக் கடன் இல்லை. கடந்த ஐந்து ஆண்டு களாகவே இந்தியாவின் கடன் அளவு குறைந்தபாடில்லை. இந்தியாவின் வரவுக்கும் செலவுக்குமான இடைவெளி பெரும் ஆபத்தாக நீடிக்கிறது.
* கடந்த சில ஆண்டுகளில் பொருளாதாரத் தில் முன்னேற்றம் இல்லாமல் இல்லை. ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் வளர்ச்சி வீதம் நம்முடைய வலுவை மிகைப்படுத்திக் காட்டுகிறது. உள்நாட்டில் அரசின் கொள்கையால் ஆக்கபூர்வமான மாற்றங்கள் ஏற்பட்டு, அதனால் வளர்ச்சி ஏற்பட்டுவிடவில்லை; சர்வதேசச் சந்தைகளின் தன்மை காரணமாகவே நமக்குச் சில சாதகங்கள் ஏற்பட்டிருக்கின்றன.